Saturday 19 March 2011

மாமாவின் மரணம்

மாமா...86 வயது[என் தந்தையின் சகோதரியின் கணவர்].மருத்துவ மனைக்கே போகாத உடம்பு.இறுதி 10 நாட்கள் மட்டுமே ராமச்சந்திரா வாசம்.  அத்தைமகன் மொபைலில் சேதி சொல்ல விரைந்தேன் அத்தை வீட்டுக்கு.  வீட்டுக்கு யார் வந்தாலும்   “வா”என்று கேட்காத மாமா கண் மூடி படுத்து கிடந்தார்.  சிறு வயதில் எனக்கும் மாமாவுக்கும் உள்ள பிணைப்பு அனைத்தும் பிளாஷ்பேக்கினேன்.

“வா”என வாய் கேக்காதே ஒழிய கண்கள் வரவேற்க்கும் என்றுமே!   ஒரு கோடைவிடுமுறையில், மாட்னிஷோவில் இரண்டு சினிமா அத்தையோடு...... செகண்ட்ஷோவில் இரண்டு சினிமா மாமாவோடு....இப்படியாக 60 சினிமா ஒரு மாதத்தில் பார்த்து கின்னஸ் படைத்தேன்.[அப்போது ஒரே காட்சியில் ஒரே கட்டணத்தில் இரண்டு படங்கள் காட்டப்பட்டது.] என் திரைப்பட ரசனைக்கு அடி உரம் இட்டவர்கள் இந்த மாகாத்மாக்கள்.

அவர்கள் வீட்டில்தான் கல்கியும்,சாண்டில்யனும் அறிமுகம் ஆனார்கள் எனக்கு.  ஆர்.எஸ் மனோகரின் சூரபத்மனை தரிசித்தேன்.  விவித்பாரதியும், இலங்கை வானொலியின் தமிழ்சேவையையும் கேட்டு இனித்தது இன்றும் காதில் இருக்கிறது.

அத்தை மகன் முழு நேர அரசியல்வாதியாகிவிட்டான்.   ஒரே கட்சிக்காரர்கள் கூட்டம்.   நூற்றுக்கணக்கில் மாலைகள் குவிந்தன.   உடனுக்குடன் அவற்றை அப்புறப்படுத்தி முற்றத்தில் ஒரு குழாய்க்கு அணிவித்து அதற்க்கு தற்காலிக கவுரவம் கிடைத்தது.  ஒருவன் அதன் அருகே பம்மி பம்மி நெருங்கினான்.  பிரஷ்ஷா தோற்றமளிக்கும் ஒரு மாலையை தேர்வு செய்து எடுத்து,தண்ணீரெல்லாம் தெளித்து  பிளாஸ்டிக் கவரிலிட்டு  புது மாலையாக்கி யாருக்கோ காத்திருந்தான்.  காத்திருந்த நபர் அல்லக்கைகள் புடை சூழ வந்தார். ரெடியான பிரஷ் மாலையை வாங்கி இறுதி மரியாதையை செவ்வனே செய்தார்.

இடுகாட்டுக்கு செல்லும் நேரம் கணிக்கப்பட்டது.  எல்லா சடங்குகளும் முடிந்து மாமாவின் நெற்றியில் திருநீறு பட்டையாக பூசப்பட்டது.

சொல்ல மறந்து விட்டேன்.

 என் மாமா மஞ்சள் துண்டு கூட அணியாத பழுத்த நாத்திகவாதி.

Sunday 13 March 2011

புதுமுகம் அறிமுகம்

வணக்கம்.முதன்முதல் பதிவுலகில் அடியெடுத்து
வைக்கிறேன்.வாழ்த்துங்கள்.
இப்பதிவில் அரசியல்,இலக்கியம்,சினிமா என எனக்கு பிடித்த விஷயங்களில் விளையாட வருகிறேன்.முதன் முதலாக ஈழத்து கவிதையில் துவங்குகிறேன்.என்னை மிகவும் பாதித்த கவிதை.
                                              இரத்தத்தில் எழுதியது
இனியும் எங்களால் தாங்க முடியாது.
இனியும் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது.
எங்களுடைய குதிரைகளை தின்றுவிட்டோம்.
எங்களுடைய பறவைகளையும் தின்று விட்டோம்;
எலிகளையும் பெண்களையும் தின்றுவிட்டோம்...
இன்னும் எங்கள் வயிறு காய்ந்து கொண்டுதானிருக்கிறது.

எங்கள் அரண்களை மொய்த்திருக்கிறார்கள் எதிரிகள்.
அவர்கள் நாலாயிரம் பேர்களுக்கும் மேல்;நாங்கள் நானூறு பேர்.

இனியும் வில்லிழுத்து,வசைகளல் அவர்களைத்தாக்க
வலு இல்லை எங்களிடம்;அவர்களைக் குதறத்
துடிக்கும் பற்களைக்கடித்துக்கொள்ள மட்டுமே வலு உள்ளது
எங்களிடம்.

பற்றி எரியும் இக்கவிதையை விதைத்தவர் சு.வில்வரத்தினம்.
விடியல் வெளியீடான “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற கவிதை நூலில் இது போன்ற வெடிமருந்துகள் கொட்டிக்கிடக்கிறது.

இது போன்ற நல்ல விசயங்களை இனம் காட்டுவேன்.
நன்றி.